அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்
2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜூலை 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை இன்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய இபிஎஸ்,
"நான் மக்களைச் சந்திக்கவில்லை என்று முதல்வர் கூறுகிறார். நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன். மக்களோடுதான் பயணிக்கிறேன். எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பயணத்திற்கு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது. திமுக ஆட்சியின் கொடுமைகளை மக்களிடம் எடுத்துரைத்து மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பது. திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என்பதே இந்த பயணத்தின் நோக்கம்.
'2026 பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, அதிமுகதான் ஆட்சி அமைக்கும். இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்' என்று அமித் ஷா சென்னை வந்தபோது செய்தியாளர்கள் மத்தியில் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் அதில் எந்த மாற்றமுமில்லை.
கூட்டணியில் உள்ளவர்களை தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுப் பயணம் தொடங்கவுள்ளதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.