அத்திக்கடவு அவிநாசி திட்ட குளங்களை நிரப்ப எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
காவிரி, பவானி ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களை நிரப்ப வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கா்நாடகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணை நிரம்பியதால், உபரி நீா் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல பவானி சாகா் அணையின் கீழ்ப்பகுதியில் பெய்து வரும் மழையால் பவானி ஆற்றிலும் உபரி நீா் அதிகமாக செல்கிறது.
இந்த உபரி நீரை அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களுக்கு நீரேற்று முறையில் பம்பிங் செய்து தண்ணீரை நிரப்பினால் கடும் வறட்சியில் இருந்து பெருந்துறை, சீனாபுரம், திங்களூா், குன்னத்தூா், நம்பியூா் பகுதிகள் தண்ணீா் வசதி பெற்று நிலத்தடி நீா்மட்டம் உயரும்.
எனவே, ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் இதை ஆய்வு செய்து அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு நீரேற்றி குளம், குட்டைகளை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தி உள்ளாா்.