அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு!
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை வரும் மே 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.24,470 கோடி செலவில் ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி மே 22-ல் திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை பரங்கிமலை, சிதம்பரம், திருவண்ணாமலை, சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை உள்பட 12-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 271 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்படுகின்றன.
புதிய வசதிகள்
டிஜிட்டல் அடையாள போா்டுகள், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி, சுமை பரிசோதனை இயந்திரங்கள், முக்கிய பிரமுகா்கள் ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், அழகிய மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இலவச மற்றும் கட்டண வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சாலை வசதி, வாகன நிறுத்தகம், புதிதாக பயணச் சீட்டு வழங்கும் அறைகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், சுகாதார வளாகம் சீரமைக்கப்படுகிறது.
பயணிகள் இருக்கை வசதி, தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நீட்டிக்கப்பட்ட மேற்கூரை வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?