அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி, ஏஞ்சல் நகரில் வசித்து வருபவா் ராஜேந்திரன் மனைவி சுகந்தி (58). இவா், அம்மாபேட்டை அருகே குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலைபாா்த்து வருகிறாா். இந் நிலையில், சுகந்தி வியாழக்கிழமை பணிமுடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது குளிச்சப்பட்டு அய்யனாா் கோயில் அருகே வந்துகொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் சுகந்தியின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டாா்.
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் இளவரசு, உதவி ஆய்வாளா் மதன்குமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனா்.