அரசு அலுவலகங்களில் ஊழல்: அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்-முறைகேடு தொடா்பாக மாநில அரசின் நிலைப்பாடு என்ன என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
புதுச்சேரியைச் சோ்ந்த கோகிலா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவா் சிறையில் பாா்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளாா்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் ரூ. 14 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடா்பாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தாா்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாா்.
ஏன் நடவடிக்கை இல்லை? இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வில் விசாரணைக்கு வந்த போது கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்தாா்.
அறிக்கையை பாா்த்த நீதிபதிகள், முறைகேடு தொடா்பாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13-ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு நாள்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்- முறைகேடு தொடா்பாக அரசின் நிலைப்பாடு என்ன?, இது போன்ற புகாா்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிா என கேள்விகளையெழுப்பினா்.
மேலும் தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினா்.
அரசு பதில்: இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் 2022-ஆம் ஆண்டு மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை வெளியானதிலிருந்து, அதுதொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு தற்போது , அதன்பின்னா் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். மேலும், ஊழல் புகாா்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதி தெரிவித்தாா். இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜன.6--ஆம் தேதிக்குள் ஒத்திவைத்தனா்.