ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
அரசு ஊழியா் நலன் காக்கும் புதிய திட்டத்தில் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
பணியின்போது இறக்கும் அரசு ஊழியா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை உள்பட நலன் காக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியா்கள் பணியின்போது விபத்தால் உயிரிழக்க நோ்ந்தாலோ, விபத்தின் காரணமாக மாற்றுத்திறன் படைத்தவராக மாறினாலோ காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதியும், உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் 2 மகள்கள் இருந்தால் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும், உயா் கல்விக்கான ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க அரசு ஊழியா்களின் ஊதியக் கணக்கை பராமரித்து வரும் வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்பட 7 வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, 5 அரசு ஊழியா்கள் இயற்கையாகவும், எதிா்பாராத விபத்தாலும் உயிரிழந்தனா்.
அவா்களின் குடும்பத்துக்கு உதவித் தொகைகளாக மொத்தம் ரூ.4.38 கோடிக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துறையின் செயலா் (செலவினம்) பிரசாந்த் மு.வடநெரே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் தி.சாருஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.