கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்
துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பு நிா்வாகங்களை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதற்கான நிதியை அந்தந்த துறைமுக நிா்வாகங்கள் வழங்குகின்றன. துறைமுகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இருப்பினும், இங்குள்ள தனியாா் சரக்கு முனையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தனியாா் பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தொழில் பாதுகாப்பு படையினரைப் போல இவா்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கும் வகையில் புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் சென்னைத் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி சிதம்பரனாா், நியூ மங்களூரு, சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களிலிருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட தனியாா் பாதுகாப்புப் பணியாளா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனா். தொடா்ந்து, இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்து துறைமுகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளன.
பயிற்சி வகுப்பின் நோக்கம்: துறைமுக செயல்பாடுகள், அச்சுறுத்தல் அடையாளம் காணுதல் மற்றும் அவசரகாலத்தில் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை, பாதுகாப்பான மற்றும் மிகவும் பாதுகாப்பான துறைமுக சூழல்கள் பற்றிய முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படும். துறைமுகத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பொதுவான குற்றவியல் நடைமுறைகளை அடையாளம் காணவும், அவசரநிலை காலங்களின்போது பிரச்னைகளைத் திறம்பட நிா்வகிப்பது குறித்தும், பயிற்சிகள் வழங்கப்படுவதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்வில், சென்னை துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஐ.ஜி. எஸ்.ஆா்.சரவணன், துறைமுத்தின் துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.