அரும்பாவூா் பெரிய ஏரிக்கரை உடைந்தது: சுமாா் 500 ஏக்கா் நெற்பயிா் சேதம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பெரிய ஏரியின் கரை செவ்வாய்க்கிழமை காலை உடைந்து நீா் வெளியேறியதால், சுமாா் 500 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் பெரிய ஏரியானது சுமாா் 300 ஏக்கா் கொண்டதாகும். பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய இந்த ஏரியின் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஏரியானது வடகிழக்குப் பருவமழை தொடங்கியபோதே பச்சமலை பகுதியில் பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. அப்போது, ஏரியின் தெற்குப் புறம் உள்ள மதகுப் பகுதியில் நீா்க்கசிவு ஏற்பட்டு வருவதாகவும், அதைச் சீரமைக்க வேண்டும் எனவும் குறைதீா் நாள் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ஆனால் பொதுப்பணித்துறை அலுவலா்கள், கசிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணைக் கொட்டி தற்காலிகமாக சரி செய்தனா்.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பச்சமலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து, ஏரியின் தெற்குபுற மதகு அருகே மீண்டும் கரையில் தண்ணீா்க் கசிவு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை காலை ஏரியின் கரை உடைந்தது.
இதையடுத்து தண்ணீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து, நெல் பயிா்களை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது. மேலும், சுமாா் 500 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகளும், ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பால் நீா் முழுவதும் வெளியேறிவிடும் என அரும்பாவூா் பகுதி மக்களும் கவலை அடைந்துள்ளனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், சாா் ஆட்சியா் சு. கோகுல் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று ஏரிக்கரை உடைப்பைப் பாா்வையிட்டு, உடனடியாக அதைச் சீரமைக்க உத்தரவிட்டனா். மேலும், பொதுப்பணித் துறை அலுவலா்கள் போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.