அவதூறு வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சமரசமான கங்கனா ரணாவத் - ஜாவேத் அக்தர்!
கங்கனா ரணாவத், ஜாவேத் அக்தர் இருவரும் தங்களது அவதூறு வழக்கில் சமரசம் ஏற்பட்டு இந்த வழக்கினை முடித்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.
நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கியிருந்தார்.
பலகட்ட பிரச்னைகளுக்குப் பிறகு இந்தப் படம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்னை?
2020ஆம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகு கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில் இருந்து இருவருக்கு இந்தப் பிரச்னை தொடங்கியது. இதில் ஹிருத்திக் ரோஷனிடம் தன்னை மன்னிப்பு கேட்கும்படி சொல்லியதாகக் கூறினார்.
டிச.2024 முதல் இருவரும் இந்த வழக்குகளில் இருந்து சமாதானம் அடைவதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
சமரசத்தில் முடிந்த வழக்கு
இந்நிலையில் கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இன்று நானும் ஜாவேத் அவர்களும் மத்தியஸ்தம் மூலமாக தங்களது வழக்குகளில் இருந்து சமரசம் செய்து கொள்கிறோம். இந்த மத்தியஸ்தம் நடந்தபோது ஜாவேத் அக்தர் என்னிடம் கருணையாகவும் பண்பாகவும் நடந்துகொண்டார். எனது அடுத்த படத்தில் ஒரு பாடல் எழுதவும் ஒப்புக்கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
40 வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தேரி புறநகர் நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை பாந்த்ரா நீதிமன்றதுக்கு மாற்றப்பட்டது.
பலமுறை இந்த வழக்கு விசாரணைகளுக்கு ஆஜர் ஆவதில் கங்கனாவுக்கு சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக பாந்த்ரா நீதிமன்றம் அவருக்கு பிணையில்லா வாரண்ட் பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
