`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,01,800 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராகுல் காந்தியின் பீகார் யாத்திரையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டது மிக முக்கியமானது. அவர் சொன்னதை போல் சொந்த மக்களின் வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பயங்கரவாதத்திற்கு ஈடானது. இந்த செயல் குறிப்பிட்ட விதத்திலே ஆர்.எஸ்.எஸ்-ன் துணையினோடு குஜராத் மாடலாக மாறியிருக்கிறது. பா.ஜ.க-வின் வாக்காளர்களுக்கு மட்டும் ஐந்து வாக்குகளும், மற்றவர்களுக்கு ஒரு வாக்கும் அளிக்கக்கூடிய குஜராத் மாடலாக இருக்கிறது. இதனையே இந்தியா முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு பீகாரில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த சதியை ராகுல் காந்தி முறியடித்திருக்கிறார். இந்த யாத்திரையில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி.

பா.ஜ.க-வை வெற்றி பெற செய்யும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ராஜீவ் குமார், ஞானேஷ்வர் குப்தா ஆகியோரின் கைகளில் இருந்து தேர்தல் ஆணையத்தை விடுதலை செய்ய வேண்டும். இந்த வாக்கு திருட்டில் இருந்து இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இதற்காக எங்களது போராட்டமும், பயணமும் தொடர்கிறது. அ.தி.மு.க-வை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவது தவறில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருந்தது. குறித்த கேள்விக்கு. ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருப்பது என்பதை எல்.முருகனின் கருத்து உறுதி செய்திருக்கிறது. அ.தி.மு.க ஆர்.எஸ்.எஸினுடைய ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க அமித்ஷா-வின் அ.தி.மு.க-வாக மாறிவிட்டது.
ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பாக இ.பி.எஸ் மாற்றிவிட்டார். அ.தி.மு.க-வினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இரட்டை இலை சின்னம் மட்டும் கையில் இருக்கிறது. மொத்த கட்சியும் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கு சென்று விட்டது. அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை.