ஆக.15 இல் 3 விரைவு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்!
சென்னை சந்திப்பிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்கள் வரும் 15 ஆம் தேதி கோவைக்கு செல்லாமல் போத்தனூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவை வடக்கு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில விரைவு ரயில்கள் ஆக. 15 ஆம் தேதி கோவை ரயில் நிலையத்துக்குப் பதிலாக போத்தனூருக்கு இயக்கப்படும்.
அதன்படி, சென்னை சந்திப்பிலிருந்து கோவைக்கு சேலம் வழியாக நாள்தோறும் காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் கோவை விரைவு ரயிலும், காலை 7.15 மணிக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயிலும் ஆக. 15 ஆம் தேதி அன்று இருகூா் மாா்க்கத்தில் போத்தனூா் வரை இயக்கப்படும்.
இதேபோல, எா்ணாகுளம் - கேஎஸ்ஆா் பெங்களூரு விரைவு ரயிலும் ஆக. 15 ஆம் தேதியன்று கோவை ரயில் நிலையத்துக்கு பதிலாக போத்தனூரில் நின்று செல்லும். இதுதவிர, மேட்டுப்பாளையம் - போத்தனூா் இடையேயான மெமு ரயில் இருமாா்க்கத்திலும் ஆக.15 ஆம் தேதி ரத்துசெய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.