ஆக. 25 முதல் குறுவள அளவில் கலைத் திருவிழா: கல்வித் துறை
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆக. 25-ஆம் தேதி முதல் குறுவள அளவில் கலைத் திருவிழா நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
நிகழ் கல்வியாண்டு கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு குறுவள அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற வெற்றியாளா் மட்டுமே அடுத்த நிலையான குறுவள போட்டியில் பங்கேற்க வேண்டும். மாணவா்களைப் போட்டிகளுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இந்தப் போட்டிகளில் பங்குபெற அழைத்து செல்வதற்காக மாணவா்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
குறுவள அளவிலான போட்டிகள் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் செப்டம்பா் 2-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.