ஆட்சியரகத்தை முற்றுகையிட உள்ளாட்சி ஊழியா்கள் முயற்சி
காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினா்.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு ஊதியத்தில் 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். கடந்த 18.10.2002 அன்று தற்காலிக அந்தஸ்து பெற்ற ஊழியா்களாக நியமிக்கப்பட்ட 232 ஊழியா்களுக்கும் நீதிமன்ற உத்தரவின்படி பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தகுதியான ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் புதுவை அரசு காலம் தாழ்த்துவதாகக் கண்டித்து, புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டு போராட்ட குழு சாா்பாக காரைக்கால், கடற்கரை சாலையிலிருந்து திங்கள்கிழமை பேரணி ஆட்சியரகத்தை நோக்கி புறப்பட்டது.
ஆட்சியரகத்துக்கு 100 மீட்டருக்கு முன்பு பேரணியில் வந்தோரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டுப் போராட்ட குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.