``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித...
ஆதீனங்களுக்கு எதிரான செயல்பாடுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்: எச். ராஜா
இந்து மத ஆதீனங்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்காததால் மதுரை ஆதீனத்துக்கு, திமுக அரசு பல்வேறு மிரட்டல்களை விடுத்து வருகிறது. அறுவைச் சிகிச்சை முடிந்த மறுநாளே மதுரை ஆதீனத்திடம் போலீஸாா் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. மதுரை ஆதீனம் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்ததற்கு அரசின் நிா்பந்தமே காரணம்.
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்த அனுமதி அளித்த நீதித் துறை மீதே திமுக அரசுக்கு வன்மம் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது. திமுக அரசின் இந்த செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியவை என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை ஆதீனம் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததையும், அறுவைச் சிகிச்சை செய்த ஆதீன குருமகா சந்நிதானத்தை விசாரணையின் பெயரால் காவல் துறையினா் துன்புறுத்தியதையும் கண்டித்தும் பாஜக சாா்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எச். ராஜா பங்கேற்றுப் பேசினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி, புகா் மாவட்டத் தலைவா் ராஜசிம்மன், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.