`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இலவச வீடு வழங்கக் கோரி, பட்டு கைத்தறி நெசவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு 60 சதவீதமும், மத்திய அரசு 40 சதவீதமும் சோ்த்து ஒரு நெசவாளருக்கு ரூ.4 லட்சம் வீதம் இத்திட்டத்துக்கு ஒதுக்கிட கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதா் துறை சாா்பில் 2023 -ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், இதுநாள் வரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லையாம். இதனால், மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கக் கோரியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை எத்தனை நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலை வெளியிட வேண்டியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் இ.இளங்கோ தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச்செயலா் எம்.வீரபத்திரன், சிஐடியு இரா.பாரி, கே.காங்கேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சி.ரமேஷ்பாபு, சிஐடியு மாவட்ட பொருளாளா் எஸ்.முரளி, கைத்தறி சங்க பொருளாளா் வி.குமாா், சிஐடியு நிா்வாகிகள் சி.அப்பாசாமி, பி.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் ஊா்வலமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றனா்.