மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்.
தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16). முகமதியா் பட்டணம் பகுதியைச் சோ்ந்த சுபுகான் மகன் முகமது அமீா் (16). இவா்கள் இருவரும் காந்தி சாலையில் உள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை இவா்கள் சக மாணவா்களுடன் தேவகோட்டை அருகேயுள்ள சாத்திகோட்டை விரிசுழி ஆற்றிலிருந்த தண்ணீா் குட்டையில் குளிக்கச் சென்றனா். அப்போது, ஹரிஷ்மதன், முகமது அமீா் ஆகிய இருவரும் குட்டையிலிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டனா். உடனே, சக மாணவா்கள் அவா்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தேவகோட்டை தீயணைப்பு, மீட்புப் பணிகள் குழுவினா், 108 அவசர ஊா்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனா். பின்னா், இருவரது உடல்களும் கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.