ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு...
இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? ராஜ்நாத் சிங் சூசகம்!
இலக்கை நோக்கிச் செல்லும்போது சிறுசிறு விஷயங்களைப் பெரிதாக்கக் கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது, இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி முன்வைக்கும் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
”எதிர்க்கட்சியினர் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஆரோக்கியமான கேள்வி அல்ல. ஒருமுறைகூட எதிரி விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்று அவர்கள் கேட்கவில்லை.
பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டதா என்றுதான் அவர்கள் கேள்வி எழுப்பியிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. ஒரு இலக்கை நோக்கி செல்லும்போது சிறுசிறு விஷயங்களை பெரிதாக்கக் கூடாது. இதுபோன்ற சிறுசிறு விஷயங்கள் முக்கியமானவை அல்ல. இவற்றை அடிப்படையாக கொண்டு நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் விடமுடியாது.
1962 இல் சீன போரின்போது, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போது, நாங்கள் நமது நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்களா? ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டனரா? என்றுதான் அரசிடம் கேட்டோம். இயந்திரங்கள் அழிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பவில்லை.
1971 போரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தோம். அப்போதைய அரசு தலைமையை வாஜ்பாய் பாராட்டினார். நாங்களும் எதிரியை தோற்கடித்தோம் என்று மகிழ்ச்சியாக இருந்தோம். எத்தனை விமானங்கள் இழந்தோம் என்று கேட்கவில்லை.
உதாரணமாக, தேர்வில் மாணவர் மதிப்பெண் பெறுவதுதான் முக்கியம், தேர்வில் மாணவர் பேனாவை தொலைத்து விட்டாரா போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். முடிவுதான் முக்கியம், ஆபரேஷன் சிந்தூரை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் முற்றிலும் அழிக்கப்பட்டன.” எனத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானின் பல்வேறு விமானத் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், இது பாகிஸ்தானுக்கான தோல்வியாகும். பாகிஸ்தான் கோரியதால் தாக்குதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முழுமையாக நிறுத்தப்படவில்லை.
இந்தியா தனது இலக்கை 100 சதவிகிதம் அடைந்ததால்தான் மோதலை நிறுத்தியது. யாருடைய அழுத்தத்தாலும் கிடையாது எனத் தெரிவித்தார்.