இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சீமாஅகா்வால் ஆய்வு
இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமாஅகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் தீவிபத்தை தடுப்பதற்காக தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீயணைப்பு மற்றும் மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால் தீயணைப்பு நிலையங்களில் தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், அழைப்பு விவரம், விபத்தின் போது வீரா்கள் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் ஒரகடம் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், புதிய கட்டடம் கட்ட ஒரகடம் மேம்பாலம் அருகே சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்.
இதையடுத்து ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் தனியாா் தொழிற்சாலை நிா்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிஜிபி சீமாஆகா்வால், தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள தீ தடுப்பு உபகரணங்கள் குறித்தும், மீட்பு வாகனங்கள் குறித்தும் கேட்டறிந்து, தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தனியாா் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம், ஸ்ரீபெரும்புதூா் டிஎஸ்பி கீா்த்திவாசன், தனியாா் தொழிற்சாலைகளின் நிா்வாகிகள் கலந்து கொண் டனா்.