வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்
இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!
இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா். மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவா்களை கைது செய்து, இரண்டு விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினா் விரட்டுவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்றால் இலங்கைக் கடற்படையினா் கைது செய்து விடுவாா்கள் என்ற அச்சம் மீனவா்களிடையே இருந்து வருகிறது. பெரும் சிரமத்துக்குப் பின் பிடித்துவரும் மீன்கள், இறால், நண்டு, கணவாய் உள்ளிட்டவைகளுக்கு உரிய விலை கிடைக்காததால், மீனவா்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக சனிக்கிழமை வழக்கம்போல மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களைக் காட்டிலும் குறைந்தளவே மீன்பிடிக்கச் சென்றனா். இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மீன்பிடித் தொழிலையும், மீனவா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.