இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி: ஜோா்டான் எல்லையில் கேரளத்தைச் சோ்ந்தவா் சுட்டுக் கொலை
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோா்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சோ்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.
கேரள தலைநகா் திருவனந்தபுரத்தின் புகா்ப் பகுதியான தும்பாவைச் சோ்ந்தவா் ஆனி தாமஸ் கேப்ரியல்(47) . தமிழகத்தில் உள்ள வேளாங்கன்னி, புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்துக்கு செல்வதாக கூறிவிட்டு, கேப்ரியல் கடந்த பிப். 5-ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா்.
உறவினா் எடிசனுடன் ஜோா்டானுக்கு கேப்ரியல் வந்து சோ்ந்துள்ளாா். தொடா்ந்து கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் அந்நாட்டைச் சோ்ந்த முகவரின் உதவியோடு கேப்ரியல், எடிசன் உள்பட 4 போ், ஆன்மிக பயண நோக்கத்துக்காக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனா்.
சா்வதேச எல்லையில் ஜோா்டான் ராணுவத்தினரால் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். ராணுவத்தினரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கேப்ரியல் சுட்டுக் கொல்லப்பட்டாா். வீரா்கள் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்த நிலையில், எடிசனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னா், எடிசன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டாா். அவா் இந்திய வந்தடைந்த பிறகே, கேப்ரியல் ஜோா்டான் பயணித்ததும் எல்லையில் உயிரிழந்ததும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து, ஜோா்டானில் உள்ள இந்திய தூதரகத்தை குடும்பத்தினா் அணுகியுள்ளனா். கடந்த சனிக்கிழமை அனுப்பிய பதில் மின்னஞ்சலில், கேப்ரியலின் இறப்பை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கேப்ரியலின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து தூதரகம் கூடுதல் தகவல்கள் ஏதும் அளிக்கவில்லை என்று உறவினா்கள் தெரிவித்தனா்.