வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிவாரண நிதி: மத்திய அரசுக்கு காங்க...
ஈரோடு: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நீக்குமாறு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தயாரிக்கப்பட்ட முன்னணி பிராண்டுகளின் பொருள்களைச் சலுகை விலையில் விற்பதாகக் கூறி தரமற்ற பொருள்களை விற்பனை செய்த சம்பவமும் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திண்டலில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில், வடமாநில ஜவுளி நிறுவனம் ஒன்று, அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கோடிக்கணக்கான அளவில் தயாரிக்கப்பட்ட முன்னணி பிராண்டுகளின் ஆடைகள், காலணிகள் தேக்கம் அடைந்துள்ளன என்று சொல்லி, அதைச் சலுகை விலையில் விற்பனை செய்வதாக உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் கொடுத்திருந்தது.

அதிலும், குறிப்பாக ரூ.3,000 மதிப்பிலான ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகள், காலணிகள் ரூ. 200, ரூ.300 ரூபாய்க்கும், முன்னணி நிறுவனங்களின் ரூ.8000 மதிப்புள்ள பொருள்கள் ரூ. 500 ரூபாய் முதல் ரூ.1490 வரை விற்பனை செய்வதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சிறப்புச் சலுகையாக லேடிஸ் பர்ஸ், லெதர் பெல்ட், இன்சுலேட் வாட்டர் பாட்டில், நறுமணப் பொருட்கள் ரூ.100-க்கும், ரூ.1500 மதிப்புள்ள குழந்தைகளின் ஆடைகள் ரூ.100க்கும், ரூ. 3000 மதிப்புள்ள பெண்களுக்கான பிரீமியம் ஆடைகள் ரூ. 200 க்கும் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
பல முன்னணி பிராண்டுகளும் சலுகை விலையில் விற்பனை செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் அங்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் அனுப்ப முடியாமல் உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதாக விளம்பரத்தை நம்பிய ஏராளமான மக்கள் திண்டலில் உள்ள அந்த ஹோட்டலில் குவிந்தனர்.
அங்கிருந்த பொருள்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கிய மக்களுக்கு, அவை உள்ளூர் சந்தையில் விற்கக்கூடியவை எனத் தெரியவந்தது.

இதனால், ஆவேசமடைந்த மக்கள் இதுகுறித்து அங்கிருந்த வியாபாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாததால், பொருள்களை வாங்கிய மக்கள் கடும் கோபமடைந்தனர். மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த விற்பனை நிறுவனத்தின் மேலாளர் அங்கிருந்து நழுவிச் சென்றார்.
தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர்களிடமும் இதுபோன்று தரமற்ற போலியான விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன் எனக் கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தையடுத்து விற்பனையைப் பாதியிலேயே நிறுத்திய ஜவுளி நிறுவனம் இந்த விற்பனை மையத்தை மூடியது.
போலியான விளம்பரங்கள் மூலம் வடமாநில நிறுவனம் மக்களை ஏமாற்றியது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இதுதொடர்பாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இருந்தாலும், அந்த நிறுவனம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.