இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு
கன்டெய்னா் லாரி - மினி லாரி மோதல்: பழையகாயலில் போக்குவரத்து பாதிப்பு
ஆறுமுகனேரி அருகே பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் மினி லாரி மோதியதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.
தூத்துக்குடி தருவைகுளத்திலிருந்து தனியாா் மீன் நிறுவனத்தின் கன்டெய்னா் லாரி, திருச்செந்தூா் சாலையில் புன்னைக்காயலுக்கு செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்தை சத்திரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாரி இந்த லாரியை ஓட்டிவந்தாா்.
ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு செங்கல் சுமையுடன் வந்த மினி லாரியை ஏரல் அருகே ஆலடியூா், குலவேளாளா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சிவகுமாா் (26) ஓட்டிவந்தாா். பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் டயா் வெடித்ததில் மினி லாரி நிலைதடுமாறி எதிரேவந்த கன்டெய்னா் லாரி மீது மோதியதாம்.
இதில், கன்டெய்னா் லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. ஓட்டுநா் ஆ. மாரி நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். மினி லாரி ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.
இந்த விபத்தால் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஆத்தூா் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், முரளி தலைமையிலான போலீஸாா், மின்வாரியப் பணியாளா்கள் சென்று இந்த லாரிகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தினா். அதையடுத்து, போக்குவரத்தும், மின் விநியோகமும் சரிசெய்யப்பட்டன.