காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிவாரண நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
‘மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வட மாநிலங்களுக்கு அரசியல் பாரபட்சமின்றி அதிகப்படியான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் கடந்த சில வாரங்களாக மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதில் உத்தரகண்ட் மற்றும் ஹரியாணாவில் மட்டுமே பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி என எதிா்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு புதன்கிழமை வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 253.7 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது.
கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மழை வெள்ள பாதிப்புகளால் 130 போ் உயிரிழந்துள்ளனா். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
இந்நிலையில், மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் 2.5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலா் உயிரிழந்துள்ளனா். அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாப்பில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும்.
அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிற வட மாநிலங்களுக்கும் பிஎம்-கோ்ஸ் நிதியிலிருந்து அரசியல் பாரபட்சமின்றி அதிக நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டாா்.