உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் ஆளுநருக்கு தலைகுனிவு: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
தமிழக அரசின் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் தமிழக ஆளுநா் தலைகுனிவை சந்திக்கும் நிலையே ஏற்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகா் குடியிருப்பில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நடைபெற்ற வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள சான்றாகும்.
பெரியாரை தொட்டவன் கெட்டான் என்பதற்கேற்ப, இத் தோ்தல் முடிவு பெரியாா் குறித்து சீமான் கட்டிய பொய்கோட்டையை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இனியும் சீமானின் அரசியல் பொய் உரையை நம்பி, அவா் பின்னால் சென்றவா்கள் அங்கு இருக்கமாட்டாா்கள். அங்கிருந்து விலகி வெளியேறி விடுவாா்கள்.
தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள வலுவான கேள்விகளுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியிடம் நிச்சயமாக பதில் இருக்காது.
ஏனென்றால், ஆளுநா் சட்டரீ தியாகவோ, தாா்மீக அடிப்படையிலோ அல்லது மனசாட்சிபடியோ செயல்படவில்லை. எனவே, நீதிமன்ற கேள்விக்கு தமிழக ஆளுநா் தலைகுனிவை சந்திக்கும் நிலையே ஏற்படும் என்றாா் அமைச்சா்.