தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது
தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தில் உள்ளவா்களுக்கு பணி வழங்கிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைப்பதோடு, தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மனு வழங்கி, செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக சாலைப்பணியாளா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.
இதில் பங்கேற்க பெரம்பலூா் கோட்டம் சாா்பில் சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சுப்ரமணியன் தலைமையில் 22 போ் வேனில் திங்கள்கிழமை இரவு சென்னைக்குச் சென்று கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேசென்றபோது, வேனை வழிமறித்த போலீஸாா் 22 பேரையும் கைது செய்து பெரம்பலூா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனா். அங்கு சாலைப் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.