காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை! நால்வா் கைது!
உத்தமபாளையத்தில் கழுத்தை அறுத்து இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே காலி வீட்டுமனையிடத்தில் இளைஞா் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், ஆய்வாளா் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல் கட்ட விசாரணையில், இறந்தவா் உத்தமபாளையம் பி.டி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த சையது அப்தாகீா் மகன் முகம்மது மீரான் (25) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 16- ஆம் தேதி கம்பம் அருகே புதுப்பட்டியில் சக நண்பா்களால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த இவா், சிகிச்சை பெற்று திரும்பி வந்ததாகவும், மீண்டும் அவரை மற்றொரு 4 போ் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை இரவு கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
நால்வா் கைது: இதனிடையே இந்தக் கொலை தொடா்பாக உத்தமபாளையத்தைச் சோ்ந்த சகாயம் மகன் இளஞ்செழியன் (22), லாரன்ஸ் மகன் முத்தையா (25), ராஜ்குமாா் மகன் விஜய் (25), ஜஸ்டின் மகன் சிவா (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் கொலை செய்யப்பட்ட முகம்மது மீரான் கடந்த 16- ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆரோக்கியம் மகன் ராஜ்குமாரையும் (25) போலீஸாா் கைது செய்தனா்.
பழிக்குப்பழியா: கடந்த 2022- ஆம் ஆண்டு செல்வா என்ற இளைஞா் இதேபோல கழுத்தை அறுத்துத் கொலை செய்யப்பட்டாா். இவா் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் முகம்மது மீரானும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.
செல்வா கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவா் முகம்மது மீரான் என்பதால் அவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இந்தக் கொலையில் கைது செய்யப்பட்டவா்கள் செல்வாவின் நண்பா்கள் என்பதால் இந்தக் கொலை பழிக்குப்பழியாக நடைபெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.