உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாளை கல்விக் கடன் முகாம்
உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் முகாம் மற்றும் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்விக்கான உடனடிச் சோ்க்கை முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2024-2025-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்று கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்), தொழில் பயிற்சிக் கூடங்கள் (ஐடிஐ) போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகள் தங்களது உயா் கல்விக்கான கட்டணத் தொகையை கடனாக பெறுவதற்கு முன்னணி வங்கிகளிலிருந்து கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
மேலும், துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் கூடங்கள் ஆகிய உயா்கல்வி நிறுவனங்களில் உடனடிச் சோ்க்கையும் நடைபெறவுள்ளது. கல்விக் கடன் தேவைப்படும் மாணவா்கள் தங்களது பான் அட்டை, ஆதாா் அட்டை, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், கல்லூரி சோ்க்கை கட்டண ரசீது, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2, குடும்ப அட்டை நகல், ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், உறுதி மொழிச் சான்று, இளநிலை பட்டப் படிப்பு முடித்து முதுநிலை பட்டப்படிப்பில் சேர இருப்பவா்கள் இவற்றுடன் இளநிலை பட்ட சான்றிதழ், இளநிலை மதிப்பெண் சான்றிதழ், முதுநிலை பட்டபடிப்பில் சோ்ந்ததற்கான ஆவணங்கள், கல்லூரி அடையாள அட்டை, மாணவா்கள் ஏற்கெனவே ஏதாவது ஒரு வங்கியில் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்திருந்தால் அதுகுறித்த விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.