திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
உள்ளூர் பிரச்னைகள் டு லோக்கல் மினிஸ்டர்ஸ் அட்டாக் வரை.! - விஜய்யின் சுற்றுப்பயண பிளான் என்ன?
மதுரையில் மாநாட்டை முடித்த கையோடு சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார் தவெக தலைவர் விஜய். சுற்றுப்பயணத்துக்காக பிரத்யேகமாக ஒரு பிரசார வாகனத்தையும் ஏற்பாடு செய்து பனையூர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சுற்றுப்பயணம் சார்ந்து விஜய்யின் திட்டம்தான் என்ன? எங்கிருந்து எப்போது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்? பனையூர் தரப்பில் விசாரித்தோம்.

கட்சி ஆரம்பித்து முதல் மாநாட்டை தமிழகத்தின் வட பகுதியில் விக்கிரவாண்டியில் நடத்தியிருந்தார். இரண்டாவது மாநாட்டுக்காக தென் மாவட்டங்களை குறிவைத்து மதுரையிலும் இறங்கிவிட்டார். இடையில், கோயம்புத்தூரில் ஒரு பூத் கமிட்டி கூட்டத்தையும் நடத்திவிட்டார். ஆக, இதுவரை செல்லாத மண்டலத்திலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க வேண்டும் என விஜய் தரப்பு முடிவு செய்திருக்கிறது. அதன்படி மத்திய மாவட்டமான திருச்சியில் தொடங்கி முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களை கவர் செய்யலாம் என்றும் ப்ளான் வைத்திருக்கின்றனர்.
பெரும்பாலும் திருச்சியிலிருந்துதான் முதற்கட்ட சுற்றுப்பயணம் என முடிவாகிவிட்டாலும், ஈரோட்டையும் காஞ்சிபுரத்தையும் கூட ஒரு ஆப்சனாக வைத்திருக்கிறார்களாம். செப்டம்பர் 10-20 க்குள்தான் ஒரு தேதியில் சுற்றுப்பயணத்தை தொடங்க நாள் குறிக்க நினைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள். செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். ஆக, சென்டிமென்ட்டாக காஞ்சிபுரம் அல்லது ஈரோட்டிலிருந்து அந்தத் தினங்களில் மக்கள் சந்திப்பை தொடங்கலாம் எனவும் ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் மத்திய மாவட்டங்கள் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை அழைத்து இது சம்பந்தமாகவும் ஆனந்த் பேசியிருக்கிறார். ஆனாலும் முதலில் திட்டமிட்டதைப் போல திருச்சியிலிருந்து தொடங்கி டெல்டா தொட்டு விவசாயிகள் பிரச்னைகளை மையப்படுத்தி சுற்றுப்பயணத்தை தொடங்குவதைத்தான் விஜய்யின் வியூகத் தரப்பு விரும்புகிறதாம்.

திருச்சியிலிருந்து ஆரம்பிக்கும்பட்சத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதியே சுற்றுப்பயணத்தை தொடங்கிவிடலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பாகவே மா.செக்கள் அத்தனை பேரையும் அவரவர் தொகுதிகளில் உள்ள முக்கியமான பிரச்னைகளை சேகரித்து தலைமைக்கு ஃபைலாக கொடுக்குமாறு பனையூர் தரப்பிலிருந்து உத்தரவு பறந்திருந்தது. அதேமாதிரி, 2 மாதங்களுக்கு முன்பாக மக்கள் குறைதீர் விண்ணப்பம் என்ற பெயரில் நிர்வாகிகளை வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அறிக்கைக் கொடுக்குமாறு கூறியிருந்தனர்.
இவைபோக, ஆதவ்வின் நிறுவனமும் தொகுதிவாரியான புள்ளிவிவரங்களுடன் சில டேட்டாக்களை எடுத்து வைத்திருக்கிறதாம். இதையெல்லாம் வைத்துதான் உள்ளூர் பிரச்னைகளை அட்ரஸ் செய்யும் வகையில் சுற்றுப்பயணத்துக்கான விஜய்யின் உரைகள் தயார் செய்யப்பட்டு வருகிறதாம்.
மாநாட்டில் மக்கள் பிரச்னைகளை விஜய் பேசவில்லை என எழுந்த விமர்சனங்களையும் பனையூர் தரப்பு கவனத்தில் கொண்டிருக்கிறதாம். அதேமாதிரி, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து லோக்கல் மினிஸ்டர்களை கடுமையாக விமர்சிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

தினசரி மக்களை சந்திக்காமல் ஓரிரு நாள் இடைவேளைகளில் மக்கள் சந்திப்புகளை நிகழ்த்தும்படிதான் சுற்றுப்பயண அட்டவணை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதேமாதிரி, 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்!' என்பதை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கவிருக்கிறார்கள். சுற்றுப்பயணத்திலும் வேறெந்த நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் விஜய்யை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தும் திட்டத்தில் இருக்கின்றனர்.

சிறு சிறு இடைவேளைகளில் மக்கள் சந்தித்து டிசம்பர் வரை இந்த சுற்றுப்பயணத்தை நீட்டித்து செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். இதன் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு அரசியல் களத்தில் தவெக பேசுபொருளாக இருக்க வேண்டுமென்றும் நினைக்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறது தவெக முகாம். அதேமாதிரியே சுற்றுப்பயணத்திலும் தொண்டர் பலத்தை காட்டுவதன் மூலம் ஒரு சில கட்சிகள் தங்களை நோக்கி கூட்டணிக்காக அணுகும் என்றும் தவெக தரப்பு நம்புகிறது. பனையூர் தரப்பின் எண்ணங்கள் ஈடேறுமா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.