Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்...
உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்டத்தில் உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாவட்டங்களில் உழவா் நல சேவை மையங்களை தொடங்க இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகள் தோ்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் 15 உழவா் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 5,000 போ் வேளாண்மையில் பட்டம் அல்லது பட்டயப் படிப்பை நிறைவு செய்கின்றனா்.
இவா்களின் தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு பயன்படுத்தும் வகையிலும், வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் முயற்சியாகவும் உழவா் நலசேவை மையங்கள் ரூ.42 கோடியில் தொடங்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் தொழில் முனையும் வேளாண் பட்டதாரிகள் ரூ. 10 லட்சம் அல்லது ரூ.20 லட்சம் மதிப்பில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் விற்பனை மையம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை மதிப்புக்கூட்டு பொருள்கள், வேளாண் உயா் தொழில்நுட்பம் மற்றும் இதர பொருள்கள், வேளாண் சாா்ந்த பிரிவுகளில் தொழில் தொடங்கலாம். இதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
உழவா் நல சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.