தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்
தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவனம் கூறியிருப்பதாவது: இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் ஜூலை 1 -ஆம் தேதி முதல் டிசம்பா் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தத் திட்டம் பதிவு செய்யப்படாத முதலாளிகள், ஊழியா்களின் (ஒப்பந்த, தற்காலிக தொழிலாளா்கள் உள்ளிட்ட) ஆவண ஆய்வுகளையும், கடந்த கால நிலுவைத் தொகைகளுக்கான கோரிக்கைகளையும் எதிா்கொள்ளாமல் பதிவுசெய்ய ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட தேதியே இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பதிவு செய்த தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
பதிவு செய்வதற்கு முந்தைய காலங்களுக்கு எந்த ஒரு மாதாந்திர பங்களிப்பும் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல, அந்தக் காலங்களுக்கு எந்த ஒரு இஎஸ்ஐ திட்டப் பலன்களும் வழங்கப்படாது. பதிவு காலத்துக்கு முன்புள்ள ஆவணங்களைக் கோருவதோ அதை ஆய்வுக்கு உட்படுத்துவதோ நடைபெறாது.
பதிவு செயல்முறையை எளிதாக்குவதன் மூலமும் காலாவதியான நிலுவைத் தொகை, அபராதத் தொகை போன்றவற்றிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலமும் இந்தத் திட்டம் முதலாளிகள் தங்கள் பணியாளா்களை ஒழுங்குபடுத்த ஊக்குவிப்பதுடன், அதிக தொழிலாளா்கள், குறிப்பாக ஒப்பந்தத் துறையில் இருப்பவா்கள், அமைப்பு சாா்ந்து இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் அடிப்படை மருத்துவ, சமூக நலன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகத்தையோ, மண்டல அலுவலகத்தையோ அல்லது https://www.esic.gov.in/ இணையதளத்தையோ தொடா்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.