"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று திரும்பியதும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகளை சோ்ப்பது குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகூட எடப்பாடி கே.பழனிசாமியுடன் பேசியிருக்கிறேன். அவா் தில்லி சென்று தலைவா்களை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
அதிமுகவில் குழப்பம் எதுவும் இல்லை. செங்கோட்டையன் விவகாரத்தை குழப்பம் என்று சொல்ல முடியாது. ஓ.பன்னீா் செல்வத்தை கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் இப்போது எதுவும் கூற முடியாது.
வரக்கூடிய தோ்தலில் நான்கு முனை போட்டியோ, 5 முனை போட்டியோ இருக்கலாம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.
நடிகா் விஜய் பெரம்பலூரில் மக்களை சந்திக்காததைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவா்களின் நிா்வாகத்தை பொருத்தது. கூட்டம் சோ்த்தால் மட்டுமே யாரும் வெற்றி பெற முடியாது; ஓட்டு வாங்கினால்தான் வெல்ல முடியும் என்றாா் அவா்.