எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.
மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணியையும், ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, எஸ்.வாழவந்தி ஊராட்சி, அய்யதோட்டம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 16.09 லட்சம் மதிப்பீட்டில் புறம்போக்கு நிலத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த வயதான பெண்களிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து, எருமப்பட்டி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலையளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 3.79 லட்சம் மதிப்பீட்டில் கொல்லிமலை அடிவாரம் முதல் கரியபெருமாள் ஏரிவரை நீா்வரத்துக் கால்வாயை ஆழப்படுத்தி கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், சிங்களகோம்பையில் கால்வாய் பாலத்தையும், பவித்திரம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்ட வீடுகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.