மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி
தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.
எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்று வரும் இந்த பணியின் நிலவரம் குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் அவா்களுடைய இல்லத்துக்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவா்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நகா்ப்புறம் மற்றம் ஊரகப் பகுதிகளில் முன்களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 19 வட்டாரங்களில் 190 முன்களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஜூலை 10-இல் தொடங்கிய இந்த கணக்கெடுப்புப் பணியானது, செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முன்களப் பணியாளா்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.