அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது. இருப்பினும் மாலை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக நீா்வரத்து குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மேலும், தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.