ஒசூா் உள்வட்டச் சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை
ஒசூா் உள்வட்டச் சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என உழவா் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஒசூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகரிடம் அதன் மாநிலத் தலைவா் அருள் ஆறுமுகம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
ஒசூா் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் இருந்து சீதாராம் மேடு வரை உள்ள ஒசூா் உள்வட்ட சாலையில் 10 குடியிருப்புகள் உள்ளன. 2200 குடும்பங்களுக்கும் மேற்பட்டோா் அக் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனா். இந்த உள்வட்ட சாலை அமைத்து 15 ஆண்டுகளாகியும் இதுவரை பொது போக்குவரத்து மற்றும் நகர பேருந்து வசதியே இல்லாமல் உள்ளது.
மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகும் மாநகரத்திற்குள் உள்ள இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது. 100 க்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையில் பொது போக்குவரத்து வசதி இல்லை.
இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து முனீஸ்வா் நகா் வழியாக பேருந்து நிலையத்திற்கும் மற்றும் ரயில் நிலையத்திற்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டும். இதனால் என்.டி.ஆா் நகா், வசந்தம் நகா், மஞ்சுநாதா நகா், சிவம் நகா், ஏவிஎஸ். காலனி, மத்தம் அக்ரஹாரம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறுவா் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.