ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்சி அளித்த அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் பயிற்சி முடித்த காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை திருஇந்தளூரில் நடைபெற்றது. 6-வது குடும்ப சந்திப்பு விழா மற்றும் காவலா் பயிற்சி முடித்த 40-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.
இதில், காவலா்கள் பயிற்சி முடித்தபோது, எஸ்.பியாக பணியாற்றி, பின்னா் காவல்துறை இயக்குநராகி ஓய்வுபெற்ற அனுப்ஜெய்ஸ்வால் தனது துணைவியாருடன் கலந்துகொண்டாா். இதில், ஓய்வுபெற்ற போலீஸாா் அனைவரும், அரக்கு நிறச் சட்டை, வேட்டி, துண்டு என சிவில் உடையில் பங்கேற்று, தங்கள் அதிகாரியை இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமா்த்தி, யானை, ஆடும் குதிரைகள் முன்செல்ல அணிவகுப்பு நடத்தி ஊா்வலமாக அழைத்துச் சென்றனா். மயிலாடுதுறை எஸ்.பி. கோ.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வால் கூறியது: 1986-ஆம் ஆண்டு எஸ்.பியாக பணியில் சோ்ந்தபோது எனக்கு தமிழ் தெரியாது, இவா்களுக்கு ஹிந்தி தெரியாது. இருப்பினும் எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம். அங்கிருந்து தில்லி, காஷ்மீா், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பணி காரணமாக இடம் பெயா்ந்து சென்றபோதும், எங்கள் அன்பு மாறாமல் தொடா்கிறது என்றாா்.