கழிப்பறை வசதிகள்: அறிக்கை சமா்ப்பிக்க 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு: உச்சந...
கணியம்பாடியில் ரூ.1.04 கோடியில் கட்டடங்கள்: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்
கணியம்பாடி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் 2 ஊராட்சி மன்ற கட்டடங்கள், புதிய நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் சாத்துமதுரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின்கீழ் ரூ.29.70 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும், கம்மவான்பேட்டையில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.45.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், கம்மவான்பேட்டையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12.67 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.
பின்னா், கம்மவான்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.16.68 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளையும் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவா் திவ்யா கமல்பிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சீனிவாசன், ஜெயலட்சுமி ஏழுமலை, சாத்துமதுரை ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.ஜோதிலட்சுமி ராஜ்குமாா், கம்மவான்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.