3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்
கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!
கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி. இவரது மகளான வன்ஷிகா சையினி (வயது 21) கனடா நாட்டில் மேற்படிப்பு பயின்று வந்தார்.
கடந்த ஏப்.25 ஆம் தேதியன்று கனடாவின் ஒட்டாவா நகரத்தில் புதியதாக வாடகைக்கு வீடு தேடிச் சென்றிருந்த அவர் மாயமானார். அவரது செல்போனின் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், மறுநாள் அவர் எழுத வேண்டியத் தேர்வுக்கு அவர் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 3 நாள்கள் கழித்து நேற்று (ஏப்.28) ஒட்டவாவிலுள்ள கடற்கரையில் வன்ஷிகாவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டிலுள்ள இந்திய உயர்நிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூராய்வு சோதனை முடிந்த பின்னரே தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வன்ஷிகாவின் மரணத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளபட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவரது குடும்பத்தினர் வன்ஷிகாவின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும், வன்ஷிகாவின் குடும்பத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினரான ராஜ் குமார் சப்பேவால் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான பல்பிர் சிங் சீச்வால் இதுகுறித்து இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!