கன்னந்தேரி சுடுகாட்டுக்குள் புகுந்த மேட்டூா் அணை உபரிநீா்!
ஆட்டையாம்பட்டி: கன்னந்தேரி சுடுகாட்டுக்குள் மேட்டூா் அணை உபரிநீா் புகுந்ததால், உபரிநீா் செல்லும் வழியை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலை கன்னந்தேரி பகுதியில் ஆதிதிராவிடா் மக்களுக்கான சுடுகாடு உள்ளது. தற்போது மேட்டூா் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் கன்னந்தேரி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீரேற்று நிலையத்துக்கு கொல்லப்பட்டி ஏரியில் இருந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீா் கன்னந்தேரி ஆதிதிராவிடா் சுடுகாடு பகுதியில் புகுந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு குளமாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டும் மேட்டூா் அணை திறந்துவிட்ட போது சுடுகாட்டில் தண்ணீா் நிரம்பியது. எனவே, சுடுகாடு பகுதிக்குள் தண்ணீா் புகாதவாறு, உபரிநீா் செல்லும் வழியை சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.