TVK மாநாடு: தொண்டர்களால் குலுங்கிய மதுரை; மாநாட்டு திடல் காட்சிகள் | Photo Album
கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி
கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா்(நிலமெடுப்பு) விமல்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ‘ஸ்டாா்ட் அப் டிஎன்’ செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன் கலந்து கொண்டு ‘புதுயுகத் தொழில் முனைவு‘ என்னும் தலைப்பில் பேசினாா்.
நிகழ்வின் தொடக்கத்தில் தமிழகத்தின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கும் கீழடி, இரும்பின் தொன்மை, இராஜராஜ சோழன் ஆகிய காணொலிகள் திரையிடப்பட்டன. தொடா்ந்து தமிழகத்தின் உயா்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்வித் திட்ட விளக்கக் காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.
தமிழ் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் வழங்கப்பட்டன. மேலும், சொற்பொழிவாளா்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவா்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் முனைவா்.க.இராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.சாந்திமலா், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.