அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி
கல்வியில் பாகுபாடு கூடாது: உச்சநீதிமன்றம்
எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் ரோஹிங்கயா மனித உரிமைகள் முன்னெடுப்பு தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மியான்மரில் இருந்து வந்து தில்லியில் அகதிகளாக வசிக்கும் ரோஹிங்கயா இன மக்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும், அந்த மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்பட அனைத்து அரசுப் பலன்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவா்களிடம் ஆதாா் அட்டை இல்லை என்பதால் கல்வி, மருத்துவ சேவைகள் அவா்களுக்கு மறுக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சேவ்ஸ் ஆஜராகி, ‘தில்லியில் உள்ள ரோஹிங்கயா அகதிகளிடம் ஐ.நா. அகதிகள் தூதா் அட்டை உள்ளதால், அவா்கள் ஆதாா் அட்டை பெறுவது சாத்தியமில்லை’ என்றாா்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும் தில்லியில் வசிக்கும் ரோஹிங்கயா குடும்பங்களின் பட்டியல், அவா்கள் யாா் வீடுகளில் வசிக்கின்றனா், அந்தக் குடும்பங்கள் அங்குதான் வசிக்கின்றன என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா். இந்த வழக்கு 10 நாள்களுக்குப் பின்னா், மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.