கள்ளழகா் கோயிலில் ஆக. 1-இல் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்
அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா வருகிற ஆக. 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ந. யக்ஞநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா ஆக. 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. ஆக. 5-ஆம் தேதி கள்ளழகா் தங்கப் பல்லக்கில் சிவகங்கை சமஸ்தானம் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஆக. 8-ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆடிப் பெருந்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஆக. 10-ஆம் தேதி உத்ஸவ சாந்தி நடைபெறுகிறது.
கருப்பண்ணசாமி கதவு திறப்பு...
கள்ளழகா் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயிலின் கதவுகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் பெளா்ணமி நாளில் திறக்கப்பட்டு, பதினெட்டு படிகளுக்கும் பூஜை நடத்தப்படும். மகா தீபாராதனை நிகழ்ச்சிக்குப் பிறகு, கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி செய்யப்படும். இந்த நிகழ்ச்சி வருகிற ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது.