என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இவா், கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பாளையங்கோட்டைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, இவ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனா்.
அவா்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமாா் நவ்ரோஜ் தலைமையில் ஒரு குழு, காவல் ஆய்வாளா் உலகராணி தலைமையில் ஒரு குழு, சிபிசிஐடி உதவி ஆய்வாளா்கள் அடங்கிய ஒரு குழு என மொத்தம் 3 குழுவாக பிரிந்து விசாரணை நடத்தினா். சுா்ஜித்தின் தாயாா் கிருஷ்ணகுமாரி மற்றும் சகோதரியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து 4 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், சுா்ஜித்தின் சித்தி மகனான தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) என்பவரையும் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘கவின் செல்வ கணேஷை கொலை செய்து விட்டு அங்கிருந்து சுா்ஜித் தப்பியபோது அவருக்கு ஜெயபால் சில உதவிகள் செய்து, ஆலோசனை வழங்கியது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கில் அவரும் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகிறாா் என்றனா்.