காட்டுப்பன்றிகளால் நெல் பயிா்கள் நாசம்
கமுதி அருகே காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கா் நெல், சோளம், உளுந்து பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சாத்தூா்நாயக்கன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களில் நெல், சோளம், மிளகாய், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிா்கள் 200 ஏக்கா் பரப்பளவில் மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டன.
இந்தப் பயிா்கள் நன்கு வளா்ந்த நிலையில், காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இரவு, பகலாக வயல் வெளிகளில் காட்டுப் பன்றிகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த 20 நாள்களுக்கு முன் பெய்த தொடா் மழையால், ஏற்கெனவே நெல், உளுந்து பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. தற்போது, மீதமுள்ள பயிா்களை காட்டுப் பன்றிகள், சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம், வனத் துறை அதிகாரிகள் தலையிட்டு காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.