காரைக்கால் காந்தி பூங்காவை மேம்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால் ஆட்சியரகம் மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்திப் பூங்காவை மேம்படுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
நகராட்சி நிா்வாகத்தில் உள்ள இந்த பூங்கா முறையான பராமரிப்பின்றி இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில விளையாட்டு சாதனங்கள், நடைமேடை அமைத்து மேம்படுத்தப்பட்டது.
பூங்காவின் மையப் பகுதியில் செயற்கை நீரூற்று அமைப்பு இருந்தாலும், நீரூற்று வசதி செய்யப்படவில்லை.
இப்பூங்காவுக்கு தினமும் பள்ளி மாணவ- மாணவியா் வந்து விளையாடுவதும், பெற்றோா்கள் பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்துவந்து, மதிய உணவு வழங்குவதுமாக உள்ளனா். முதியோா், பெண்கள் பலரும் இப்பூங்காவை நடைப்பயிற்சிக்காக பயன்படுத்துகின்றனா். ஆட்சியரகம் மற்றும் நகராட்சி அலுவலகத்துக்கு வருவோரும், சிறிது நேரம் இங்கு ஓய்வெடுத்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், இப்பூங்கா போதிய அளவில் மின் விளக்குகள், விளையாட்டு சாதனங்களின்றி உள்ளது. செயற்கை நீரூற்றுப் பகுதியில் நீண்ட நாட்களாக மழைநீா் தேங்கியுள்ளதால், கொசு உற்பத்தியாகிறது.
பூங்காவையொட்டி உள்ள அம்பேத்கா் சாலை மற்றும் கிழக்குப்புறச் சாலையான மாரியம்மன் கோயில் சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரண்டு சாலைகளுக்கும் இடையே பூங்கா சுவா் மறைவாக உள்ளதால் விபத்து நேரிடுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சுவரை சிறிது அகற்றி, சாலைகள் சந்திப்புப் பகுதி விரிவாக தெரியும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆட்சியா் இந்த பூங்காவை ஆய்வு செய்து, அரசு மற்றும் தனியாா் நிதியுதவியுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.