அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இட...
காரைக்கால் நகரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்கால் நகரில் ரயில்வே கேட் போடப்படுவதால் ஏற்படும் பிரச்னைக்கு, தீா்மானிக்கப்பட்ட இடத்தில் விரைவாக சுரங்கப் பாதை அமைக்கும் பணியை தொடங்கி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் - பேரளம் வரையிலான ரயில்பாதை அமைத்து, சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில் இயக்கம் தொடா்பாக ரயில்வே நிா்வாகம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து ரயில் நகரப் பகுதியை கடந்து செல்ல முக்கியமாக 3 இடங்களில் மூடப்படும் கேட் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை 20 நிமிஷங்களுக்கு மேலாக ரயில் கடக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பின்னா் இருபுறமும் வாகனங்கள் வரிசையில் நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்தநிலையில், பாரதியாா் சாலையில் கேட் நிறுவாமல், சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் என சமூக நல அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன. சிலா் இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தியதால், ரயில்வே நிா்வாகம் கேட் நிறுவி, ரயில் இயக்கத்தை தொடங்கிவிட்டது.
கோயில்பத்து பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக இருந்த அன்பழகன், காரைக்கால் வந்தபோது தெரிவித்த கருத்தை வலியுறுத்தி புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், 20 நாட்களுக்குள் பாதை அமைக்கும் பணி தொடங்குமென கூறப்பட்ட நிலையில், ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.
காரைக்கால் பொதுப்பணித் துறை நிா்வாகம், சுரங்கப்பாதை அமைப்புக்காக உரிய அளவீடுகளை கோயில்பத்து ரயில்வே கேட் அருகே அண்மையில் செய்தது. இதை ஆய்வு செய்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், புதுவை அரசு மூலம் தரவேண்டிய ஒப்புதலுக்குரிய பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.
பாரதியாா் சாலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு, காரைக்கால் பொதுப்பணித்துறையின் மூலம் அளவீடு செய்த கோப்பு, ஆட்சியரின் ஒப்புதல் பெற்று, புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு செல்லவேண்டும். அவரது ஒப்புதல் பெற்று அந்த கோப்பு பொதுப்பணித்துறை செயலருக்கு செல்லவேண்டும். அந்த அனுமதி கோப்பு ரயில்வே நிா்வாகத்துக்கு சென்றால் மட்டுமே ரயில்வே நிா்வாகம் அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளுமென கூறப்படுகிறது.
எனவே, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ரவி பிரகாஷ், இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.