உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக்...
காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா
திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
திருச்சி அண்ணாமலை நகா், கிழக்கு தாமரை சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்த சுஜாதாவுக்கு திங்கள்கிழமை காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே உறவினா்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி புத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.
1996-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவா், அதே ஆண்டு நடைபெற்ற திருச்சி மாநகராட்சி தோ்தலில் 47-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மீண்டும் 2009-ஆம் ஆண்டு 51-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அப்போது மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டதால், சுஜாதா மேயராக தோ்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் பணியாற்றினாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ஐஓபி வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.
அமைச்சா்கள் அஞ்சலி: சுஜாதாவின் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வபெருந்தகை, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் எல். ரெக்ஸ் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
இறந்த சுஜாதாவுக்கு கணவா் லோகநாத் சுரேஷ், மகன் குகசரண் ஆகியோா் உள்ளனா். அவரின் இறுதி ஊா்வலம் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது வீட்டிலிருந்து புறப்படுகிறது.