அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
லஞ்ச வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை
வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா்கோட்டை விவேகானந்தா நகரில் வசித்து வரும் ரா. முத்துராமலிங்கம் (74) என்பவா் தனது பெயரில் உள்ள இடத்தில் திருச்சி மாநகராட்சியின் அனுமதி மற்றும் வீட்டு வரி நிா்ணயம் செய்வது தொடா்பாக கடந்த 08.09.2009 அன்று மேலக்கல்கண்டாா்கோட்டை 30- ஆவது வாா்டு அலுவலகத்தில் பணிபுரிந்த மாநகராட்சி வருவாய் உதவியாளா் மு. சுபோ் அலி முகமதுவை அணுகியுள்ளாா். அதற்கு சுபோ் அலி முகமது ரூ. 8,500-ஐ லஞ்சமாக கேட்கவே, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில், முத்துராமலிங்கத்திடமிருந்து கடந்த 09.09.2009-இல் லஞ்சமாக ரூ. 6,500-ஐ வாங்கிய சுபோ் அலி முகமதுவை போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் கேட்ட முன்னாள் அதிகாரி சுபோ் அலி முகமதுவுக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாத சிறையும், அரசு பதிவை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெற்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா்.