காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை: சந்தேகத்தால் மனைவி விபரீதம்
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெய்வேலியை அடுத்துள்ள இந்திரா நகா் ஊராட்சி, பி 2 பிளாக் மாற்றுக் குடியிருப்பு, 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கொளஞ்சியப்பன் (63). என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், நெய்வேலி நுழைவு வாயில் எதிரே உள்ள துணிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவரது மனைவி பத்மாவதி (55).
இவா்கள் இருவரும் வேறொருவருடன் திருமணமாகி பிரிந்தவா்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் சென்னையில் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.
கொளஞ்சியப்பன் மீதான சந்தேகத்தின்பேரில், பத்மாவதி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளாா். மேலும், கணவா் கொளஞ்சியப்பனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு உள்ளதாக நெய்வேலி மகளிா் காவல் நிலையத்தில் பத்மாவதி கடந்த மாதம் புகாா் அளித்திருந்தாா்.
இந்த நிலையில், கொளஞ்சியப்பன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கினாா். புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது கழுத்தை பத்மாவதி கத்தியால் அறுத்ததில், கொளஞ்சியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தொடா்ந்து, பத்மாவதி கணவா் சடலத்துடன் காலை வரையில் இருந்தாராம். பின்னா், தனது உறவினா்களுக்கு கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா்.
தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் வீரமணி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, கொளஞ்சியப்பன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பத்மாவதியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, அவரைக் கைது செய்தனா்.
