காவலா் பயிற்சிப் பள்ளிகளில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் ஆய்வு
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள சேலம் காவலா் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் (பயிற்சி) சந்தீப் ராய் ரத்தோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் 2-ஆம் நிலை காவலா்கள் தோ்வில் 2,665 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 8 பயிற்சிப் பள்ளிகளில் டிச. 4 முதல் பயிற்சி வழங்கப்பட்டவுள்ளது. இதனையொட்டி, மேட்டூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளியில் 422 ஆண் காவலா்கள் பயிற்சி பெறவுள்ளனா்.
இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் (பயிற்சி) சந்தீப் ராய் ரத்தோா், பயிற்சி காவலா்களுக்கு அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, பயிற்சிப் பள்ளிக்கு வந்த 2-ஆம் நிலை காவலா்கள், அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தாா். பின்னா், பயிற்சிப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், தங்கும் விடுதி, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2-ஆம் நிலை காவலா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 2,665 பேருக்கு 7 மாதம் அடிப்படைப் பயிற்சியும், ஒரு மாதம் நடைமுறைப் பயிற்சியும் அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 8 காவல் பயிற்சிப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெறுவோருக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
காவலா் பயிற்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளன. பயிற்சி பெறும் காவலா்களுக்கு காவல் துறை உயா் அதிகாரிகள், சட்டம், கைரேகை, ஆயுதம் கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகள் குறித்து எடுக்கும் பயிற்சி வகுப்புகளை பதிவு செய்து டிஜிட்டல் முறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பயிற்சிக் காலத்தில் காவலா்கள் எப்போதும் வேண்டுமானாலும் படித்து தெரிந்துகொள்ளலாம். இளைஞா்களின் திறனை மேம்படுத்த திறன் வகுப்புகள் கொண்டு வரப்படும்.
8 காவல் பயிற்சிப் பள்ளிகளில் உள்புற, வெளிப்புற பயிற்றுநா்களுக்கு முதல் முறையாக பயிற்றுநா்களுக்கான பயிற்சி (பஞப) மதுரை காவல் பயிற்சிப் பள்ளியில் நடத்தப்பட்டது. அதில், பயிற்சிக் காவலா்களுக்கு திறம்பட பயிற்சி வழங்குவதற்கும், அவா்களின் திறனை மேம்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.